Thursday, January 08, 2009

மாரி மலை முழைஞ்சில் - TPV23

திருப்பாவையின் 23-வது பாசுரம்

சிம்மாசனத்தில் அமர்ந்து எங்கள் குறைகளைக் கேட்டு, அருள் புரிவாயாக!

புன்னாகவராளி ராகம், ஆதி தாளம்

மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்*
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து*
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி*
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்*
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா* உன்-
கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் *கோப்புடைய-
சீரிய சிங்காசனத்து இருந்து *யாம் வந்த-
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்

Photobucket - Video and Image Hosting Photobucket - Video and Image Hosting
Photobucket - Video and Image Hosting Photobucket - Video and Image Hosting

பொருளுரை:

கார் காலத்தில் மலைக் குகையை தனது இருப்பிடமாக்கிக் கொண்டு உறங்கிக் கிடக்கும் பெருமை வாய்ந்த சிங்கமானது, தூக்கம் கலைத்து, தீப்பொறி பறக்க தனது சிவந்த விழிகளை திறந்து பார்த்து, மணமுள்ள தனது பிடறி முடி அலை பாயும் வகையில் உடலை நாற்புறமும் அசைத்து, நெட்டுயிர்த்து, பின் கம்பீரமாக நிமிர்ந்து கர்ஜித்து, குகையை விட்டுக் கிளம்புவது போல,

காயா மலர் நிறங் கொண்ட மாயக் கண்ணனான நீ, உனது திருமாளிகையை விட்டு இவ்விடம் வந்து, உனக்கேற்ற வகையில் உருவாக்கப்பட்ட பெருமை வாய்ந்த சிம்மாசனத்தில் அமர்ந்து, அதன் பின், நாங்கள் உனை நாடி வந்த செயலுக்கான காரணத்தை ஆராய்ந்து அருள வேண்டுமாய், பாவை நோன்பிருந்து வணங்கிக் கேட்கிறோம் !


பாசுர விசேஷம்:

இப்பாசுரம் கிருஷ்ண சிம்மத்தின் கம்பீரத்தை கோபியர் போற்றிப் பாடுவதாக அமைந்துள்ளது. சூடிக் கொடுத்த நாச்சியார், மாயக்கண்ணன் துயிலெழுவதை, ஒரு சிங்கம் விழித்தெழுவதுடன் ஒப்பிட்டு, மிக மிக அழகாக இப்பாசுரத்தை வடித்துள்ளார் !!! இது லஷ்மி நரசிம்மரை மனதில் கொண்டு ஆண்டாள் பாடிய பாசுரம் என்று ஸ்ரீமடத்தின் பெருக்காரணை சுவாமி கூறுவார். பெரியாழ்வாரும் ஆண்டாளும் சிறந்த லஷ்மி நரசிம்ம பக்தர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உடையவர் (ராமானுஜர்) ஆராதித்த பரமன் திருவடிவம் லஷ்மி நரசிம்மர் என்பது குறிப்பிட வேண்டியது.

பெரியாழ்வார் நரசிம்ம அவதாரத்தைப் பற்றி ஒரு பாசுரத்தில் அழகாக பாடியிருப்பதைப் பாருங்கள்!

அளந்திட்ட தூணை அவண் தட்ட ஆங்கே
வளர்ந்திட்டு வாளுகிர் சிங்க உருவாய்
உளந்தெதட்டு இரணியன் ஒண்மார்வகலம்
பிளந்திட்ட கைகளால் சப்பாணி...


இப்பாசுரத்தில் வரும் "மன்னி" என்ற பதம் ஆழ்வார்களுக்கு பிடித்த சொல் என்று கூறுமளவுக்கு அது நாலாயிரத்தில் பல பாசுரங்களில் இடம் பெற்றுள்ளது!

இங்கே 'மன்னிக் கிடந்துறங்கும்' = 'நிலைகொண்டு (தங்கி) படுத்துத் தூங்குகின்ற' என்பது நேரடியான பொருள்!

மன்னி என்ற சொல்லுக்கு அகராதியில் கோபம், துக்கம், அகந்தை, இடர், தியாகம் என்று பல பொருள்கள் இருக்கின்றன!

இப்பாசுரத்தில் "மன்னி" என்பதற்கு 'கம்பீரத்துடன், அச்சம் சிறிதுமற்ற தன்மையுடன்' என்று பொருள் கொள்வதும் சரியாக இருக்கும். அதாவது, சிங்கமானது, உறங்கும்போது கூட ஒருவித நேர்த்தியுடன் (உடலை ஒடுக்கிக் கொள்ளாமல்), உறக்கத்தில் கூட தன்னை யாரும் நெருங்க மாட்டார்கள் என்ற மனவலிவுடன் (செருக்குடன்) குகையில் படுத்து உறங்கிக் கொண்டிருக்கிறது! சிங்கம் வன அரசன் இல்லையா? அதற்குப் பகைவர்களே கிடையாது, மற்ற மிருகங்கள் எல்லாம் அதன் அரசாட்சியின் கீழ் அல்லவா உள்ளன! அது தான் "சீரிய சிங்கம்"!

இன்னொரு விதத்தில், மன்னி = நீக்கமற எங்கும் நிறைந்து (அ) வியாபித்து என்று பொருள்!

நம்மாழ்வார்
"ஒழிவில் காலமெல்லாம் உடனாய மன்னி வழுவிலா அடிமை செய்யவேண்டும் நாம்" என்றும்
"வைகுந்தா மணிவண்ணனே என் பொல்லா திருக்குறளா என்னுள் மன்னி வைகும் வைகல்தோறும்" என்றும்

திருமழிசையாழ்வார்
"மங்கைமன்னி வாழுமார்ப.* ஆழிமேனி மாயனே."என்றும்
குலசேகராழ்வார்
"மன்னுபுகழ் கௌசலைதன்* மணிவயிறு வாய்த்தவனே*" என்றும்
"மன்னி"யின் புகழ் பாடியிருக்கிறார்கள் :)

அது போலவே, திருமங்கையாழ்வார்
"வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய் நந்நாதக் கொழுஞ்சுடரே எங்கள் நம்பி" என்றும்
"அடியார்க்கு ஆ ஆ என்றிரங்கித்* தென்னழுந்தையில் மன்னிநின்ற* தேவாதி தேவனை*" என்றும்

தொண்டரடிப்பொடி ஆழ்வார்
"கோவிந்தா என் குடங்கையில் மன்னி" என்றும்
பெரியாழ்வார்
"மன்னியசீர் மதுசூதனா. கேசவா.* பாவியேன்வாழ்வுகந்து*" என்றும்
அருளிச்செய்த பாசுர வரிகளும் ஆழ்வார்களுக்கு "மன்னி"யின் மேல் உள்ள வாத்சல்யத்தை நிரூபிக்கின்றன!

ஆண்டாள் திருப்பாவையின் முதல் பாசுரத்திலேயே, கண்ணனை சிம்மத்துடன் ஒப்பிட்டுப் பாடி விடுகிறார், "ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்" என்று. இப்பாசுரத்தில் அந்த கிருஷ்ண சிம்மத்தை, அவனது பெருமைக்குரிய சிம்மாசனத்தில் அமர்ந்து, தங்கள் தேவைகளையும், குறைகளையும் கேட்டு, ஆராய்ந்து பின் அருள் செய்யுமாறு ஆண்டாள் வேண்டுகிறாள். ஆண்டாளின் கவிநயம் மிக அழகாக வெளிப்படுகிறது இப்பாசுரத்தில். விழித்தெழும் பரமனின் கம்பீரத்தையும், அவன் வீறு நடையையும் இதை விட அற்புதமாக வர்ணிப்பது மிகவும் கடினமே!

இங்கே கண்ணனின் ஆளுமையையும், வலிமையையும் முன்னிட்டே, ஆண்டாள் அவனை சிம்மத்தோடு ஒப்பிடுகிறாள். பிற இயல்புகளைச் சொல்ல, "பூவை பூவண்ணா" என்று விளிக்கிறாள். அதாவது கண்ணனை, "நீ காயாம்பூ நிறம் கொண்ட அழகன், மென்மையானவன், பேரருளாளன் (கருணாமூர்த்தி)!" என்று போற்றுகிறார். அது தான் கோதை நாச்சியார்!

கண்ணனது சிம்மாசனமானது "கோப்புடையது" - மிக்க பெருமைக்குரியது. ஏன் ? அந்த சிம்மாசனம், தர்மம், அதர்மம், ஞானம், அஞ்ஞானம் என்று அனைத்தையும் சட்டம் கட்டி கண்ணனால் சாதுர்யமாக அமைக்கப்பட்டது. அது அவன் மட்டுமே அமரவல்ல சிம்மாசனம். அதில் அமர்ந்தே, கண்ணன் அடியவரின் குற்றம் குறைகளை ஆராய்ந்து அருள் வழங்குவதே அவனது தகுதிக்கு ஏற்புடையதாக இருக்கும்.

மேலும், "இங்ஙனே போந்தருளி" என்பது கண்ணனின் கம்பீர நடையைக் குறிப்பதாம். கண்ணனின் நடையானது ஒரு எருதின் வீறும், ஒரு யானையின் மதிப்பும், ஒரு புலியின் சினமும், ஒரு சிங்கத்தின் தேஜஸும் ஒருங்கே கொண்ட நடை! அப்படிப்பட்ட கண்ணனது நடையழகைக் காணும் விருப்பத்தின் பேரிலும் தான், கோபியர் கண்ணனை, அவனது திருமாளிகையிலிருந்து 'இங்ஙனே போந்தருள' வேண்டுகிறார்கள் :-)

கண்ணனின் "கிடந்த" அழகை பார்த்தாகி விட்டது, அடுத்து அவனது "நடை"யழகை கோபியர் அனுபவிக்க வேண்டும் அல்லவா? அது தான், கண்ணனை அவனது திருமாளிகையை விடுத்து 'நடந்து' அரசவை மண்டபத்துக்கு வருமாறு கோபியர் வேண்டுகிறார்கள்! பக்தைகள் எல்லாம் மண்டபத்தில் இருக்கும்போது, பரமனும் அங்கு தானே எழுந்தருள வேண்டும்! என்ன ஒரு ரசம்!

கோபியர் கண்ணனிடம், "நீ எங்கள் குறைகளை பள்ளியரையில் வைத்து ஆராய்தல் சரியாகாது. நீ குருஷேத்திரத்தில் அர்ஜுனனுக்கு சொன்ன வார்த்தைகள் போல, ஸ்ரீராமனாக சேதுக்கரையில் வீபிடணனுக்கு அளித்த அபயம் போல, நீதியரசனாக பெருமை வாய்ந்த நியாய ஆசனத்தில் அமர்ந்து எங்கள் குறைகளை ஆராய்ந்து தீர்ப்பு வழங்குவது தான் முறை" என்று குறிப்பில் சொல்வதாகக் கொள்வதிலும் ஒரு நயம் இருக்கத் தானே செய்கிறது!

அதோடு, விடியலில் எழுந்திருந்து, நோன்பின் பெருமையையும், கண்ணனின் திருநாமங்களையும் பாடி, ஒவ்வொரு அடியவராக (கோபியர்) எழுப்பி, திருமாளிகை காப்பானின் அனுமதி பெற்று, நந்தகோபர், யசோதை, நப்பின்னையை பிராட்டியை எழுப்பி என்று மிகவும் சிரமப்பட்டு கோபியர் கண்ணனிடத்தில் வந்து சேர்ந்ததிலும் கோதை நாச்சியார் ஒன்றைக் குறிப்பால் உணர்த்துகிறாள். அதாவது, சரணாகதி (ப்ரபத்தி) என்பது, "எல்லாம் அவன் செயல்" என்று வெறுமனே இருப்பதாகாது, அதற்கு சுயமுயற்சியும், உழைப்பும் அவசியமாகிறது!

சில பாசுரப்பதங்களுக்கு உள்ளுரை:

1. இது 23-வது பாசுரம். 2+3 =5, அதாவது ஐந்தாவது நட்சத்திரமான மிருகசிரிஷம், நரசிம்மத்தைக் குறிக்கிறது.

2. "மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்*
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து*"
என்பது, பாவ புண்யங்களுக்கு அப்பாற்பட்ட திவ்ய ஞானத்தைப் பெற, லஷ்மி நரசிம்மரைப் பற்ற வேண்டியதை உள்ளர்த்தமாக வலியுறுத்துகிறது.

3. "வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி*
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்*
போதருமா போலே நீ"
என்பது, லஷ்மி நரசிம்மரின் கல்யாண குணங்களை போற்றிப் பாடி திசைகளெங்கும் பரப்பும் அடியார்கள் பரமபதம் அடைவர் என்பதை உள்ளர்த்தமாகக் கொண்டுள்ளது !

4. "பூவைப் பூவண்ணா" --- மலர்ந்த ஞானத்தை உருவாகக் கொண்டவன், ஞானிகளுக்கு ஞானி (ஆத்ம ஞானி)

5. "இங்ஙனே போந்தருளி" --- வைணவ ஆச்சார்யர்கள் காட்டிய வழி நடந்து


என்றென்றும் அன்புடன்
பாலா

*** 277 ***

9 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test comment !

வல்லிசிம்ஹன் said...

எ.அ.பாலா,
ரொம்ப நன்றி.
எங்க நரசிம்மனை யாரும் எழுதலியே என்று நினைத்தேன்.
தூப்புல் சொல்லும்போது சிங்கமே வருவதுபோல ஒருகாட்சி தோன்றும்.

இப்படி ஒரு காலையில்,
என்ங்அள் லக்ஷ்மின்ருசிம்ஹனைக்
காட்டியதற்கும் நன்றி.
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

குமரன் (Kumaran) said...

பாலா. இந்தப் பதிவிலும் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறீர்கள். இன்னும் கொஞ்சம் விளக்கமாக எழுதலாமே என்று தோன்றுகிறது.

பெருக்காரணை சுவாமிகளின் திருப்பாவை விளக்கங்களைப் படித்திருக்கிறேன். மிக நன்றாக இருக்கும். இப்போது கோதை தமிழில் கோதையின் கதையைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். விரைவில் திருப்பாவை விளக்கங்களைச் சொல்ல தொடங்குவேன். அதில் பெரும்பாலும் பெருக்காரணை சுவாமிகளின் கருத்துகள் தான் வரும் என்று எண்ணுகிறேன். ஏன் என்றால் அவரது விளக்கங்களைப் படித்துப் படித்து பல காலம் சென்றிருக்கிறது.

enRenRum-anbudan.BALA said...

வல்லிசிம்ஹன்,

நன்றி.
****************
குமரன்,

நன்றி.
//
பாலா. இந்தப் பதிவிலும் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறீர்கள். இன்னும் கொஞ்சம் விளக்கமாக எழுதலாமே என்று தோன்றுகிறது.
//
Let me give a BETTER TRY in the next pAsuram :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா//

இந்தப் பூவைப்பூவண்ணா என்பதைக் குறித்தே ஆழ்ந்த விளக்கங்கள் உண்டு!
சுருங்கச் சொல்லியுள்ளீர்கள் பாலா!

//யாம் வந்த-
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்//

இப்படி பறை தருவாய் என்றெல்லாம் கண்ணனைக் கேட்டுப் பார்த்து, அவன் குறும்புக்காரன் என்று தெரிந்து கொண்டு, வரத மூர்த்தியான நரசிம்மரைச் சரண் புகுகிறாள்! என் காரியத்தை முடித்துக் கொடு என்று இவரிடம் தான் மிக உறுதியாகக் கேட்கிறாள் பாருங்கள்!

enRenRum-anbudan.BALA said...

நன்றி, கண்ணபிரான் !

//இந்தப் பூவைப்பூவண்ணா என்பதைக் குறித்தே ஆழ்ந்த விளக்கங்கள் உண்டு!
சுருங்கச் சொல்லியுள்ளீர்கள் பாலா!
//
வாசிப்பவர்களை 'tax' செய்வது போல் ஆகி விடப் போகிறதே என்பதால் தான், மிக நீண்ட விளக்கம் எழுதுவதில்லை.

ச.சங்கர் said...

நல்ல பாசுரம் பாலா...குமரனும்,கண்ணபிரான் ரவிசங்கரும் சொன்னதுபோல் இன்னும் கொஞ்சம் விளக்கமாக கொடுத்திருக்கலாம் :))

enRenRum-anbudan.BALA said...

Test comment !

உயிரோடை said...

மன்னி என்ற வார்த்தைக்கு இத்தனை பொருள்களா? அதை பாடி இருக்கும் ஆழ்வார் பாசுரங்கள் அனைத்து கண்ணுக்கு விருந்து.
//கண்ணனின் "கிடந்த" அழகை பார்த்தாகி விட்டது, அடுத்து அவனது "நடை"யழகை கோபியர் அனுபவிக்க வேண்டும் அல்லவா? //
தாங்களும் ஒரு கோபியராகவே மாறிவிட்டீர்கள் போலும்
//இது 23-வது பாசுரம். 2+3 =5, அதாவது ஐந்தாவது நட்சத்திரமான மிருகசிரிஷம், நரசிம்மத்தைக் குறிக்கிறது//
எப்படி எல்லாம் ஆராய்ச்சி செய்து இருக்கின்றீர்கள்
இங்ஙனே போந்தருளி கொள்வோம் :)
வாழ்க பாலா அண்ணா.

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails